திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2024 (12:13 IST)

திமுகவை அட்டாக் செய்த ஆதவ் அர்ஜுனா! கட்சியை விட்டு நீக்கிய திருமா! - அரசியல் களத்தில் பரபரப்பு!

Aadhav arjuna

விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், சமீபமாக விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சிக்கும் வகையில் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, வாரிசு அரசியல் என நேரடியாகவே திமுகவை விமர்சித்திருந்தார்.

 

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர் கூறியுள்ளதாவது:

 

ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு 

------------------------------------

1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது  தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது. 
 

2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. 
 

3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும்  தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
 

4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
 

5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும்  பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
 

6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

 

இவண்: 

தொல்.திருமாவளவன்,

நிறுவனர்- தலைவர், விசிக.

 

Edit by Prasanth.K