வியாழன், 9 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2025 (09:57 IST)

விரைவில் வரியை நீக்கும் அமெரிக்கா? இந்தியாவுடன் சமரசம்! டெல்லி மீட்டிங் வெற்றி!

விரைவில் வரியை நீக்கும் அமெரிக்கா? இந்தியாவுடன் சமரசம்! டெல்லி மீட்டிங் வெற்றி!

இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் நேற்று டெல்லியில் நடந்த சந்திப்பில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியா மீது பரஸ்பர வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்காதது, ரஷ்யாவுடனான கச்சா எண்ணெய் வணிகம் உள்ளிட்டவற்றால் வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால் பல்வேறு துறைகளும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

 

நேற்று டெல்லியில் அமெரிக்க - இந்திய அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற்றது. இதுகுறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்திய அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் தலைமை பேச்சுவார்த்தையாளர் திரு. பிரெண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக அதிகாரிகள் குழு செப்டம்பர் 16, 2025 அன்று இந்தியாவுக்கு விஜயம் செய்தது. அவர்கள் வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளர் தலைமையிலான வர்த்தகத் துறை அதிகாரிகளுடன் இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் உட்பட இந்தியா-அமெரிக்க வர்த்தக உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் நீடித்த முக்கியத்துவத்தை ஒப்புக்கொண்டு, வர்த்தக ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய விவாதங்கள் நேர்மறையானதாகவும் எதிர்கால நோக்குடையதாகவும் இருந்தன. பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

 

இதனால் விரைவில் இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரிகள் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K