1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 மே 2025 (14:52 IST)

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

Ram Chandar Bangra

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கணவனை இழந்த பெண்களுக்கு தைரியம் இல்லை என பாஜக எம்பி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் ஏப்ரல் 22ம் தேதியன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை நடத்திய இந்திய ராணுவம், பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் நிலைகள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

 

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குங்குமத்தை (சிந்தூர்) இழந்த பெண்களுக்காக ஆபரேஷன் சிந்தூர் என இந்த தாக்குதலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து பாஜக எம்பி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

 

அரியானாவின் பிவானி பகுதியில் நடைபெற்ற மராட்டா ராணி அஹில்யபாய் ஹோல்கரின் 300 வது பிறந்தநாள் விழாவில் பேசிய பாஜக எம்பி ராம் சந்தர் ஜங்ரா “நமது மக்கள் கைகளை கட்டிக் கொண்டு உயிரிழந்திருக்கிறார்கள். சுற்றுலா பயணிகள் அக்னிவீர் பயிற்சி பெற்றவர்களாக இருந்திருந்தால் வெறும் 3 பயங்கரவாதிகளால் 26 பேரை கொன்றிருக்க முடியாது. 

 

பயங்கரவாதிகளை எதிர்த்து பெண்கள் போராடியிருக்க வேண்டும். அப்படி போராடியிருந்தால் உயிரிழப்புகள் குறைவாக இருந்திருக்கும். பஹல்காமில் கணவரை இழந்த பெண்களிடம் துணிச்சல், போர்க்குணம் இல்லை. எனவே அவர்கள் பாதிக்கப்பட்டனர்” என பேசியுள்ளார்.

 

அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

 

Edit by Prasanth.K