நாளை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை.. ரயில் சேவைகள் பாதிக்குமா?
மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக முன்கூட்டியே தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்த வேண்டும் என்று இந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த சமீபத்திய தாக்குதலைத் தொடர்ந்து எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாகும். இந்தியா எதிர்வினை தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதால், எல்லையோர மாநிலங்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மே 7ஆம் தேதி நாடு முழுவதும் 250 மாவட்டங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்களில் முக்கிய சேவைகள் பாதிக்கப்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது.
ஆனால், ரயில் மற்றும் விமான போக்குவரத்து, பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, இந்த ஒத்திகை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran