மகள் கண் முன்னே கணவனால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட பெண்.. பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!
பெங்களூருவின் சுங்கடக்கட்டே பேருந்து நிலையத்தில், 32 வயதான ரேகா என்ற பெண், தனது 13 வயது மகள் கண் முன்னே, தனது கணவனால் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார்.
கொலையாளி, 35 வயதான லோஹிதாஷ்வா, தனது மனைவி ரேகாவின் மார்பு மற்றும் வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற பொதுமக்கள், கத்தியை காட்டி மிரட்டியதால், லோஹிதாஷ்வா அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். படுகாயமடைந்த ரேகா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகள் இக்கொடூர குற்றத்திற்கு நேரடி சாட்சியாக இருந்துள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது தெரியவந்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ரேகா ஒரு கால் சென்டரில் பணிபுரிய, லோஹிதாஷ்வா ஒரு வாடகை கார் ஓட்டுநராக இருந்துள்ளார்.
திருமணத்திற்குப்பிறகு அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன. சம்பவத்தன்று காலையில் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தை தொடர்ந்து, ரேகா தனது மகளுடன் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த லோஹிதாஷ்வா, மீண்டும் சண்டையிட ஆரம்பித்துள்ளார். மகள் குறுக்கிட்டபோது, லோஹிதாஷ்வா கத்தியால் ரேகாவை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
குடும்ப தகராறே கொலைக்கான காரணம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக காமாக்ஷிபல்யா காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான கொலையாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Edited by Mahendran