கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு நாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் முதலில் கேரளாவில் இந்த நோய் பரவல் கண்டறியப்பட்டது. பின்னர் இதன் பாதிப்பு இந்தியாவின் பல மாநிலங்களிலும் விரிவடைந்தது. இந்நிலையில் தற்போது சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் ஆபத்தும் அச்சமும் நிலவி உள்ளது.
இந்த சூழலில் நமது நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத் துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். இருப்பினும், சில பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறிகள் காட்டும் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
குறிப்பாக கேரளாவில் 95 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். அதில் 27 பேர் தொற்று நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்ற 68 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலவரம் நாட்டின் சுகாதார அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கிறது. எதிர்காலத்தில் தொற்றை கட்டுப்படுத்துமாறு அனைத்து முயற்சிகளும் தொடரப்பட வேண்டும்.
Edited by Mahendran