விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் நல்ல சாலைகள் தான்.. பாஜக எம்பியின் சர்ச்சை கருத்து..!
தெலங்கானாவில் சாலை பாதுகாப்பு குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளும், அதற்கு அரசியல் கட்சி தலைவர்களின் பதிலடியும் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவெல்லாவில் நடந்த ஒரு சோகமான விபத்தில் 19 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, எம்.பி. கொண்டா விஸ்வேஷ்வர் ரெட்டி பேட்டியளித்தபோது "நல்ல சாலைகள் அதிகமான, பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. ஏனெனில் வாகனங்கள் நல்ல சாலையில் வேகமாக செல்கின்றன. ஆனால், மோசமான சாலைகளில் விபத்துகள் குறைவாகவே நடக்கின்றன, ஏனெனில் மோசமான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன" என்று அவர் கூறினார்.
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்துவதற்கு பதிலாக, நல்ல சாலைகள் விபத்துகளுக்குக் காரணம் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சாலை மேம்பாட்டு பணிகளில் உள்ள குறைபாட்டை மறைக்க ரெட்டி இத்தகைய விசித்திரமான தர்க்கத்தை முன்வைப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. நல்ல சாலைகள் இருந்தால் விபத்துகள் அதிகரிக்கும் என்ற அவரது தர்க்கம், உண்மையில் தொகுதியில் நிலவும் வளர்ச்சியின்மையை திசை திருப்பும் முயற்சியே என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
Edited by Siva