பீகார் தேர்தல் 2025: பாஜக பாதி.. ஐஜத பாதி.. தொகுதிகளை சமமாக பிரித்து கொள்ள முடிவு..!
2025 பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கூட்டணியின் முக்கியக் கட்சிகளான பா.ஜ.க.வும் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 205 தொகுதிகளை சமமாகப் பிரித்துக்கொள்ள முடிவு செய்துள்ளன. இருப்பினும், இறுதிப் பங்கீடு இன்னும் முடிவாகவில்லை.
மீதமுள்ள 38 தொகுதிகள், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் சமதா ஆகிய சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளன. ஆரம்ப நிலவரப்படி, சிராக் பாஸ்வானின் LJP-க்கு 25, ஜிதன் ராம் மாஞ்சியின் HAM-க்கு 7, மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் RLM-க்கு 6 தொகுதிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சிராக் பாஸ்வானுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுவதால், அவரது ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் சிறிய கட்சிகளுக்கு சட்டமன்றத் தொகுதிகள் குறைந்தால், அதற்கு ஈடாக மாநிலங்களவை அல்லது சட்ட மேலவை தொகுதிகளைப் பா.ஜ.க. வழங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Edited by Siva