1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 26 ஏப்ரல் 2025 (15:07 IST)

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை நிறுத்துவது சரியான முடிவாக இருக்கலாம், ஆனால் அந்த நீரை எங்கே சேமிக்கப்போகிறீர்கள் என்று அகில இந்திய மஜ்லிஸ்-எ-இத்திஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பினார்.
 
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், பயங்கரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்திய அரசை இவ்வாறு கடுமையான முடிவுகளுக்குத் தள்ளியுள்ளது என்றார். சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை முடிக்க அரசு முடிவெடுத்தது குறித்து, ஒவைசி, நீர் மறுப்பு நல்லது, ஆனால் அதன் சேமிப்புத் திட்டம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
 
அரசின் முடிவுகளை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தும், இது அரசியல் விளையாட்டு அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதே, ஆனால் பைசரன் பள்ளத்தாக்கில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது ஏன் என்பதையும் கடுமையாக கேள்வி எழுப்பினார்.
 
அத்துடன், பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் கொடூரம் செய்யும் போது, பாதுகாப்புப் படைகள் தாமதமாக வந்ததற்கு காரணம் என்ன என்றும் கேட்டார். மேலும், காஷ்மீர் மக்களை குறித்த தவறான பிரச்சாரங்களை உடனே நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
Edited by Mahendran