இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஆம் ஆத்மி? தனித்து போட்டி என அறிவிப்பு..!
டெல்லியில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால், இந்தியா கூட்டணியில் இருந்து கட்சி விலகி விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை போலவே ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும், டெல்லி சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது சமூக வலைத்தளத்தில், டெல்லி தேர்தலை தனது சொந்த பலத்தில் எதிர்கொள்ள உள்ளதாகவும், காங்கிரஸ் உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்த முடிவை அரவிந்த் கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால், காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி டெல்லியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran