நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
அமெரிக்காவால் விதிக்கப்பட்ட 50% வரியின் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்று பங்குச்சந்தை மீண்டும் சற்று உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த உயர்வு முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்து 80,218 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 24,544 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய வர்த்தகத்தில், ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.
அதே சமயம், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டார், இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சற்று சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியிலும், பங்குச்சந்தையின் இந்த மீட்சி, இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை பலத்தை உணர்த்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Edited by Siva