உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்ட’டூரிஸ்ட் பேமிலி’ பட இயக்குனர்!
குட்னைட் மற்றும் லவ்வர் படங்களின் மூலம் கவனம் பெற்ற மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது ஐந்து படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடித்துள்ள டூரிஸ்ட் பேமிலி படமும் ஒன்று. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான இந்த படத்தின் டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இலங்கை தமிழ் பேசும் குடும்பம் ஒன்று ஊரைவிட்டு ரகசியமாகக் கிளம்புவது போலவும் அதில் நடக்கும் சொதப்பல்களுமாக அந்த டீசர் கவனம் பெற்றது. இதன் காரணமாக படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இன்று இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
இந்நிலையில் இந்த படம் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. காட்சி முடிந்ததும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் அபிஷன் பேசும் போது “இந்த ஒரு நாளுக்காகதான் நாங்கள் காத்திருந்தோம். க்ளைமேக்ஸ் உள்ளிட்ட அனைத்துக் காட்சிகளும் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.உங்களிடம் இருந்து இப்படி ஒரு வரவேற்புக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்” எனப் பேசினார். பேசும் போதே உணர்ச்சிப் பெருக்கில் அவர் அழ ஆரம்பித்து விட்டார். அவரை அருகில் இருந்த சசிகுமார் ஆறுதல் படுத்தினார்.