திங்கள், 16 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (07:44 IST)

டி 20 உலகக் கோப்பையில் விளையாடுவது பற்றி சுற்றி வளைத்து பதில் சொன்ன ரோஹித் ஷர்மா!

சமீபத்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்த நிலையில் அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இது விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற மூத்த வீரர்களுக்கு கூடுதல் சோகத்தைக் கொடுத்திருக்கும். ஏனென்றால் அவர்கள் அடுத்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட சந்தேகம்தான்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை தோல்வியில் இருந்து வெளிவருவது கடினமாக இருந்ததாக கூறியுள்ளார். இப்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தயாராகி விட்டார். இதையடுத்து அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி 20 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “உலகக் கோப்பை தோல்வி என்னையும் வீரர்களையும் காயப்படுத்தியது உண்மைதான். இப்போது அதிலிருந்து மீண்டு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு தெரிகிறது. விரைவில் அதற்கான பதில் வரும்(டி 20 உலகக் கோப்பை விளையாடுவது பற்றி)” எனக் கூறியுள்ளார்.