திங்கள், 16 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:28 IST)

தலித் முதல்வர்: திருமாவளவனின் கருத்து திமுகவிற்கு வைக்கப்பட்ட குறியா?

"தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. மாயாவதி உத்தரபிரதேச முதல்வரானது ஒரு விதிவிலக்கு. மாநில அரசில் தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதை நாம் தமிழர் கட்சியின் சீமான், கார்த்தி சிதம்பரம் எம்.பி., உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

 

 

பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 

இத்தீர்ப்பு, "பட்டியலின சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்குவதாக" கூறி, உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், "பட்டியல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கவேண்டும்" என்பதை வலியுறுத்தியும் கடந்த செவ்வாய் அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

திருமாவளவன் பேசியது என்ன?

அந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் பதவியில் தலித் சமூகத்தினர் வர முடியாத சூழல் இருப்பதாக, திருமாவளவன் தெரிவித்தார்.

 

வன்னியர் 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் வேறு சாதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அரசியல் லாபத்துக்காக அறிவித்ததால்தான், சட்டப்படியான சிக்கலை அது சந்தித்ததாக திருமாவளவன் குறிப்பிட்டார்.

 

தொடர்ந்து, முதலமைச்சர் பதவி குறித்துப் பேசிய திருமாவளவன், " மாயாவதி, உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக வந்தது என்பது விதிவிலக்கு. எந்த சூழலிலும் ஒரு தலித், மாநில முதலமைச்சராக வர முடியாது. தி.மு.க., அரசு மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால், திமுக அரசு நிலையானது அல்ல. மாநில அரசுதான் நிலையானது. எந்த சூழலிலும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளும் நிலை இங்கே இல்லை" என்றார்.

 

சீமான், கார்த்தி சிதம்பரம் ஆதரவு

திருமாவளவனின் கருத்தில் தாம் உடன்படுவதாகக் கூறிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "தி.மு.க., அரசு மீது நம்பிக்கை உள்ளதாக திருமாவளவன் கூறியதை எதிர்க்கிறேன். கல்வி அமைச்சராக ஆதி திராவிடரை நியமித்தால் படிப்பு ஏறாதா? அம்மக்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையைத் தவிர வேறு எந்த துறையை இவர்கள் கொடுத்துள்ளனர்?" என செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறினார்.

 

''பல மாநிலங்களில் தலித் தலைமையை ஏற்பதில் தயக்கம் காட்டுகிறார்கள், அதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அந்தவகையில் திருமாவளனின் கருத்தில் உடன்படுகிறேன். தமிழ்நாட்டில் கக்கனுக்குப் பிறகு தலித் ஒருவர் முக்கியமான அமைச்சர் பொறுப்புக்கு ஏன் வர முடியவில்லை என்பதை ஆட்சியாளர்களிடம் தான் கேட்க வேண்டும்'' என ஊடக நிருபர்களிடம் பேசிய போது காங்கிரஸ் கட்சியின் எம்.பி., கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

 

மாநில கட்சிகள் தயங்குகின்றன- ரவிக்குமார்

"தமிழ்நாட்டை மையப்படுத்திதான் திருமாவளவன் பேசினார். பட்டியலின சமூக வாக்குகள் மடை மாறுவது என்பது ஆட்சியை தீர்மானிக்கிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் அது எதிரொலிக்கிறது. அப்படி இருந்தும் அவர்களுக்கு கட்சி மற்றும் ஆட்சியில் அதிகாரத்துவம் உள்ள பதவிகளை வழங்குவதற்கு மாநில கட்சிகள் தயங்குகின்றன. அனைத்துக் கட்சிகளிலும் இதுதான் நிலை" என பிபிசி தமிழிடம் கூறினார் வி.சி.க. பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பியுமான ரவிக்குமார்.

 

"அ.தி.மு.க., என்ற கட்சி தொடங்கப்படும் வரையில் தலித் மக்களின் கட்சியாக காங்கிரஸ் இருந்தது. அம்மக்கள் காங்கிரஸை வெகுவாக ஆதரித்தனர். எம்.ஜி.ஆர் அரசின் கவர்ச்சிகர திட்டங்கள், பட்டியலின மக்களுக்கு நேரடியாக பலன் அளிக்கக் கூடியவையாக இருந்தன. அதனால் அ.தி.மு.க.,வை நோக்கி அவர்கள் ஈர்க்கப்பட்டனர். பட்டியலின மக்களைத் தக்க வைத்துக் கொள்ள, காங்கிரஸ் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை" எனக் ரவிக்குமார் குறிப்பிடுகிறார்.

 

திருமாவளவன் பேச்சின் பின்னணி

"பிற்படுத்தப்பட்டோர், அதிகாரத்தைத் தங்கள் கையில் குவித்து வைப்பதற்கான வாய்ப்பை மண்டல் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் உருவாக்கியது. மண்டல் பரிந்துரைகளை தலித் இயக்கங்கள் ஆதரித்தாலும் தலித்துகள் மீதான அடக்குமுறைகளும் அரசியல்ரீதியாக ஓரம்கட்டப்படுவதும் நடந்தது.

 

இதன் விளைவாக, கட்சிகளிலும் ஆட்சிகளிலும் அதிகாரத்துவம் உள்ள பதவிகளில் அவர்களால் வர முடியவில்லை. இந்த சூழலை கவனத்தில் கொண்டுதான், 'தலித்துகளால் முதல்வராக வர முடியாது' என்ற தொனியில் திருமாவளவன் குறிப்பிட்டார்" என்கிறார் ரவிக்குமார் எம்.பி.

 

தி.மு.க., மீதான கோபமா?

" அ.தி.மு.க., தி.மு.க., என இரு கட்சிகளையும் இணைத்து அவர் சொல்கிறார். தற்போது அதிகாரத்தில் தி.மு.க., இருப்பதால் அவர்களை நோக்கி நேரடியாக சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். தி.மு.க., மீது தனக்குள்ள வருத்தத்தையே திருமாவளவன் வெளிப்படுத்துகிறார். " என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி.

 

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தி.மு.க., என்பது இடைநிலை சாதிகளுக்கான கட்சியாகவும் வாரிசு அரசியலை முன்னிறுத்தும் கட்சியாக மாறிவிட்டது. இதனால் தலித் மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

 

மத்திய அமைச்சரவையில் ஆ.ராசாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பை கருணாநிதி வழங்கினார். அதுவே, மாநில அமைச்சரவையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த யாருக்காவது முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளதா?" எனவும் ஆர்.மணி கேள்வி எழுப்புகிறார்.

 

அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த தனபாலுக்கு அ.தி.மு.க., அரசில் சபாநாயகர் பதவி வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டிய மணி, "தி.மு.க.,வில் இருந்து வி.பி.துரைசாமி உள்பட சிலர் வெளியேற காரணமே, சாதிப் பாகுபாடுகள்தான். தமிழ்நாடு அரசியலில் தி.மு.க.,வின் பங்களிப்பை மறக்க முடியாது. ஆனால், தலித் மக்களுக்கு அரசியலில் அதிக முக்கியத்துவத்தை அக்கட்சி கொடுக்கவில்லை.

 

தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காமல் இடைநிலை சாதிகளின் மேலாதிக்கத்தை தி.மு.க., தொடர்ந்து நிறுவுவது சரியானது அல்ல. அந்தக் கோபத்தைத் தான் திருமாவளவன் வெளிக்காட்டுகிறார்" என்கிறார் ஆர்.மணி

 

இந்தக் கருத்தில் முரண்படும் ரவிக்குமார் எம்.பி, "சபாநாயகர் பதவி கொடுக்கப்பட்டாலும் ஒருவரால் தன்னிச்சையாக செயல்பட முடியாது. சபாநாயகருக்கு தனித்தன்மை, சுதந்திரம் உள்ளது என்றாலும் அதற்கேற்ற நபரை ஆளும் கட்சி முன்னிறுத்துவதில்லை.

 

தங்களுக்கு வேண்டிய ஒருவரைத்தான் அப்பதவிக்கு கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தி.மு.க.,வை மட்டும் குறைகூற வேண்டியதில்லை. இடதுசாரிகள் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்கட்சி ஜனநாயகம் என்பது இல்லை" என்கிறார்.

 

தி.மு.க.,வே தலித் கட்சி தான்- ஆர்.எஸ்.பாரதி

"கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை தி.மு.க., கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு சரியா?" என, தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம்.

 

"தி.மு.க.,வே தலித் கட்சிதான். இப்படியொரு பேச்சை அண்ணா, கருணாநிதி காலத்தில் இருந்தே கேட்டு வருகிறோம். தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க., பாடுபட்டு வருவது குறித்து பலரும் கூறியுள்ளனர்" என்கிறார்.

 

"ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உண்டு. ஒரே நிலைப்பாட்டில் இரு கட்சிகளும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தி.மு.க., எப்போதுமே தலித் இயக்கம் தான்" என்கிறார், ஆர்.எஸ்.பாரதி.

 

உள்ஒதுக்கீடு தீர்ப்பின் தொடர்ச்சிதான், இதுபோன்ற பேச்சுகளுக்கு தொடக்கமாக இருக்கிறதா? என, ரவிக்குமாரிடம் கேட்டபோது, ''முன்னாள் முதல்வர் கருணாநிதி விதிவிலக்கான ஒரு தலைவர். இந்தியாவில் யாரும் சிந்திக்காத ஒன்றை சிந்தித்து, உள்ஒதுக்கீடு வழங்கினார். ஆனால், இன்று இதர மாநிலங்களைப் பார்க்கும்போது, 'இது ஒரு பெரிய ஆபத்து' என்பதை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை. எஸ்.சி இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான முயற்சி இது" என்கிறார்.

 

அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக, 2009 ஆம் ஆண்டில் தி.மு.க கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்ப்பு காட்டாமல் இப்போது வி.சி.க., எதிர்ப்பது குறித்து பேசிய அவர்,"கருணாநிதியின் நேர்மையான நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஆதரித்தோம். இதன்பின்னர், கல்வி, வேலை ஆகியவற்றில் முதல் முன்னுரிமையை அருந்ததிய மக்களுக்கு எனக் கொண்டு வந்துவிட்டனர். இதனால் இதர சாதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது" என்கிறார்.